BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS
Showing posts with label TAMIL POEM. Show all posts
Showing posts with label TAMIL POEM. Show all posts

Sunday, April 8, 2012

KUTRAALA ARUVI---A Poem by R.Natarajan


குற்றால அருவி !


வற்றாத குளுமைக்கு மறுபெயர் உண்டெனில்
அதுதான் --குற்றால அருவி !
வானத்தில் இருந்து வழிகின்ற 
வைரத் தண்ணீர் !
தாவி வருகின்ற 
தரளமணிக் குவியல் !
குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும்--வாரிவாரி
நீர்க்கரத்தால் வழங்கும்
நெடும்புகழ் வள்ளல் !
தெம்மாங்குப் பாடலினைத்
திரிகூட மலையில்
தேனாக இசைக்கின்ற
தெய்விகப் பேரழகி !!!
           

விண்ணை இடிக்கின்ற 
வெற்பரசன் திறல்போற்றி
வானவர்கள் பரிசளித்த
வைரமணி வடிவாள் !
நித்திலப் பெருங்கூட்டம்
நீராக மாறி
நேராக வீழ்கின்ற 
நிகரில்லா விந்தை !
செந்தமிழ் மொழியினிமை
தண்மையையும் தான்சேர்த்து
வந்த வடிவம்
வற்றாத குற்றாலம் !!!

Sunday, March 11, 2012

NILAVU--A Poem by R.Natarajan

நிலவு

அல்லிமலர் இதழ்விரிக்கக் காட்டுப் பூவை
அளாவிவரும் இளந்தென்றல் வீசும் நேரம் .
எல்லையில்லா வான்கடலில் அமுதம் என்றே
எழுலுடனே காட்சிதரும் நிலவுப் பெண்ணே !
முல்லையென உடுக்கூட்டம் முழுதும் தோன்ற
மோகனமாய் விளங்குகின்றாய் இணையே இன்றி .
சொல்லையெலாம் கடந்துநிற்கும் பெருவ னப்பே
சுந்தரமே குளிர்நிலவே! ஒளிவி ளக்கே!




தண்ணிலவின் நல்லொளியில் இந்த ஞாலம்
தகவுடனே கொண்டதெழில் மிகுந்த கோலம் .
மண்ணுலகில் ஒளிமழையை மதிபெ ருக்கும்
மனங்களிலே உவகையெனும் பயிர்செ ழிக்கும்
வண்ண மிகு நிலவொளியில் முற்றம் சேர்ந்து
மாந்தரெலாம் யாழ்கொண்டே இனிய பண்ணில்
எண்ணமதைப் பாட்டாக்கிப் பாடும் வேளை
இவ்வுலகில் மறைந்திடுமே துன்பப் பாலை !

             

        

Sunday, February 19, 2012

SIVA THAANDAVAM- A poem on Lord Siva's cosmic dance By R.Natarajan

                                     மூண்டெழுந்த தாண்டவம் !

கீண்டநிலாத் துண்டாடப் புனல்கங்கை விரைந்தாடக்
         
             கிளர்மாலை வண்டாடச் சீர்தாளம் துடிபோட,

நீண்டசடை சுழன்றாட, நெளியரவம் வளைந்தாட,

             நெருப்பாடப் பொருப்பாடக் கழல்கடகம் நெகிழ்ந்தாட ,

மூண்டெழுந்த தாண்டவத்தால் மூவுலகும் திண்டாட ,

              முற்றுமறி ஞானியர்கள் பரவசத்தால் பண்பாட,

ஈண்டுனது திருநடனம் இருகண்கள் கண்டபின்னர்

         இன்னுமொரு முறைபிறக்க வேண்டுமோ நான்
                                                                                 ஆண்டவனே !!!       

Friday, February 17, 2012

SANGATH THAMIZHANAITHUM THAA-(VENPAAKKAL)-By R.Natarajan

                                     சங்கத் தமிழனைத்தும் தா !


பாடுபொருள் எத்தனையோ ! பாடியவர் எத்தனையோ !
தேடுகின்ற எல்லாம் தெளிவாக்கும் -- நீடுலகில்
தங்கப் புதையலும் தான்வேண்டேன் ,தாயேயுன்
சங்கத் தமிழனைத்தும் தா !


தேன்வேண்டேன், பால்வேண்டேன் ,தித்திக்கும் முக்கனியும்
நான்வேண்டேன், இன்பம் நனிவேண்டேன்--"யான்வாழ்நாள்
இங்குலகில் பண்ணனுக்கே " என்ற வளவன்வாழ்
சங்கத் தமிழனைத்தும் தா!


ஈந்தான் தலையொருவன் ; ஈடில் புலவனுக்கு
வேந்தனே வெண்கவரி வீசினான் -- சாய்ந்தமுல்லை
தங்கிடத் தேர்தந்தான் தார்வள்ளல் , ஈங்கிவர்வாழ்
சங்கத் தமிழனைத்தும் தா !


காலக் கருவூலம் ,காவியப் பூஞ்சோலை ,
ஞாலம் அளந்திடும் நற்பனுவல் --சாலமிகப்
பொங்கும் சுவையமுதம் ,பொன்றாத வாழ்வியலாம்
சங்கத் தமிழனைத்தும் தா !


முத்தும் முழுமணியும் மொய்புகழ் ஆடகமும்
அத்தனைச் செல்வம் அவையாவும் -- மெத்தவே
எங்கள் இலக்கியத்திற் கீடாமோ ? ஆதலினால்
சங்கத் தமிழனைத்தும் தா !


கனலும் கறையானும் காலமாம் வெள்ளப்
புனலும் அழித்தவை போதும் !--இனிநாங்கள்
இங்கிணைந்து செம்மொழியே ! எம்முயிராய்க்  காத்திடவே
சங்கத் தமிழனைத்தும் தா !!!



(உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கவிதைப் போட்டிக்கு அனுப்பிய வெண்பாக்கள் )


குறிப்பு : கவிதைப் போட்டியின் தலைப்பு ---"சங்கத் தமிழனைத்தும் தா"















Wednesday, February 15, 2012

NOYILIRUNDHU VIDUTHALAI-A Poem by R.Natarajan

நோயிலிருந்து விடுதலை

     
'அருந்தியது அற்றபின்தான்
அடுத்தபிடி ' என்ற
அய்யன் சொற்படி உண்பதே
ஆரோக்கிய வாழ்வின்
முதற்படி !

உண்பதற்கும் உரைப்பதற்கும்
உள்ளது ஒரு வாயே !
பாதியாய் இரண்டினையும்
பகுத்திட்டால் வருமோ
நோயே !

உப்புக் கடலாய் உடலை மாற்றினால்
குப்பெனக் குருதி கொதித்துப் பொங்கிடும் !
பகையும் ஒருநாள் பாசமாய் மாறும்
புகையால் என்றுமே மரணம்தான் நேரும் !


கடலில் மூழ்கி மடிந்தவரை விடக்
குடியில் மூழ்கி முடிந்தவர் மிகப்பலர் !
நடந்து சென்றால் ,நோயைக்
கடந்து செல்லலாம் !

உடம்பை வளர்த்தால்
உயிரும் வளரும் '---இதுதான்
திருமந்திரம் திருத்தமாய் மொழியும்
மூலமந்திரம் !

குழந்தையைப் போல் உடலையும்
குறை அணுகாமல் வளர்த்திடல் வேண்டும்
என்பதே இந்த மந்திரம்
இயம்பும் தந்திரம் !

சரியான உணவு
முறையான பயிற்சி
ஒழுங்கான வாழ்க்கை ---இவற்றால்
உடல்நலம்,மனவளம் பேணலாம் !
நோயிலிருந்து விடுதலை
காணலாம் !

இறுதியில் ஓர் உறுதிமொழி :
வருமுன் காப்போம் !
வந்துவிட்டால் .......? தகுந்த
மருத்தவரைப்
பார்ப்போம் !!!

(சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுப் பொது மருத்துவமனை நடத்திய ௨௦௧௦ -2010 சுதந்திர தின விழாக் கவிதைப் போட்டியில் விருது பெற்ற கவிதை )      

Friday, February 10, 2012

THAAMARAI--A POEM BY R.Natarajan

                                              தாமரை .

மல்லிகை மணத்தோடு ரோஜாவின் நிறத்தையும் 

அள்ளிக் கலந்தெடுத்து ஆண்டவன் செய்த மலர்! 


காலைக் கணவன் கதிர்க்கரத்தால் துயிலெழுப்ப 

வெட்கிச் சிவந்துதன் இதழ்விரித்து முறுவலிக்கும் !


தானுளம் விரும்பியே திருமகள் வதிமலர் 

ஞானியர் யோகத்தில் நண்ணும் மதிமலர் 


வெள்ளம் பெருகி விரைந்தே உயர்ந்தாலும் 

துள்ளித் தாமரையும் உயர்ந்து தலைதூக்கும் 


வெள்ளம் போல் வேதனைகள் வாழ்க்கையில் மேவினால் 

உள்ளத் தாமரை ஊக்கத்தால்  உயரட்டும் !


Malai-A poem by R Natarajan

                                                      மலை !

நதிகளின் பிறப்பிடம்
 .
முகில்களின் இருப்பிடம் .

அடியைப் பூமியில் ஆழமாய்ப் பதித்து

முடியால் விண்ணை எம்பித்  தொடுதல் 

மனித இனத்துக்கு மலை கூறும் 

விடா முயற்சியின் விளக்க உரை.

மலைச்சிகரம் ஏறுதல் போற்றுதற்குரியது 

மனச்சிகரம் ஏறுதல் 

போற்றி வணங்கத் தக்கது !

Thursday, February 9, 2012

NADAIPAATHAI VAAZHKKAI-A POEM BY R.Natarajan

                                         நடைபாதை வாழ்க்கை 


ஏழ்மையில் இருக்கும்' செல்வ விநாயகர் ',
அரசியல் காற்று அடிக்கும் திக்கில் 
பறக்கும் கட்சிக் கொடிகள் ,
உருவம் பார்க்க உடைந்த கண்ணாடி ,
ஓலைப் பாய்கள் ,ஓட்டைப் பானைகள் ,
தலைமுறைத் தேவையைத் தனக்குள் அடக்கும் 
தகரப் பெட்டி .

வாகன ஒலிகளின் தாலாட்டில் மயங்கி 
அன்னை மடியில் ஆனந்தமாய்த் தூங்கும் 
அழுக்குக் குழந்தை --ஆனால் 
அழகுக் குழந்தை .

காவல் நாயுண்டு ---கட்டிக் 
காப்பதற்குத் தான் பொருள் இல்லை ...
சமையில் முதல் மையல் வரை
சகலமும் இங்கேதான் .
--இதுவே இவர்கள் வாழ்க்கைப் பாதை --
நமக்கோ நடைபாதை! 

-வறுமையில் பிறந்ததால் --அதுவே
பிறப்புரிமையாய் ஆன போதும் 
பாதையை ஒட்டிய சுவர் வாசகம் ,
' வளமான சமுதாயம் காண 
வாரீர், வாரீர்' என்று வாய்கிழிய 
வரவேற்கும் ! 

Wednesday, October 5, 2011

Vetriyum sooduvom -A song on Goddess Saraswathi-By R.Natarajan

                                      வெற்றியும் சூடுவோம் !


ஏழிசை யாழினை ஏந்திய பாமகள் 
     இயம்பிடும் சொற்களை இயக்கிடும் நாமகள் 
ஊழினைக் கடக்கவே உதவிடும் கோமகள் 
      உயரிய அருங்கலை உறைந்திடும் மாமகள் !


நோக்கினில் கலைகளின் நுண்பொருள் விளங்கிடும் 
      நொடியினில் ஞானமும் கல்வியும் துலங்கிடும் 
பாக்களில் பூக்களின் நறுமணம் வீசிடும் 
      பாரினில் கற்களும் வாயினால் பேசிடும் !

உறுதியும் தெளிவுமே சேர்ந்திடல் வேண்டுமே 
      உள்ளொளி பெருக்கியே அவளருள் தூண்டுமே 
சிறிதள வாயினும் அவள்புகழ் பாடுவோம் 
     செயல்களில் புகழுடன் வெற்றியும் சூடுவோம் !


Thursday, January 27, 2011

BALLET DANCE--POEM

பாலே நடனத்துக்குப் புதுக்கவிதை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அசைவுகள்- -இசைவுகள்
#####################

ஒற்றைக் காலில் ஓர்
ஒயிலான மாதவம் !
இரு கைகள் இங்கே
இறக்கைகளாய் இயங்குவதால்
உயரே கொண்டு செல்லும்
உல்லாச லாகவம் !
அசைவுகள் அனைத்தும் - -இங்கே
இசையின் இசைவுகள் .
நுனிக்கால் எழுதுகின்ற
நுட்பமிகு கவிதை !!!


('கல்கி' பத்திரிகை நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கவிதை --௦௩/௦௭/௧௯௯௪)04/07/1994