BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, July 31, 2012

MAZHAI --A poem by R Natarajan

                                
                           மழை 

அள்ளிக் கொடுத்திட 
வள்ளல் மழைக்கு 
வெள்ளிக் கரங்கள் 
                                          ஆயிரம் ,ஆயிரம் !

நீரை முகந்து, மேகம் என்னும் 
பெட்டகத்தில் சேமித்து வைத்து ,
உரிய பருவம் வந்த உடனே 
வட்டியுடன் வழங்கிடும் 
                                          வானத்து வங்கி !

இடியின் கட்டியம் எங்கும் ஒலிக்க
மின்னல் வெளிச்சம் போட்டுக் காட்ட
உல்லாசமாய் உலாவரும்  
                                         மேல்நாட்டு ராணி !

Monday, July 30, 2012

SUTHANTHIRAP PARAVAIKAL--A poem by R.Natarajan

                                 சுதந்திரப்  பறவைகள்


வானத்து  வீதியில்  வழிமறிக்கும் "சிக்னல் " இல்லை ;
அரசியல் பேரணிகள் ,அடிதடிகள் ஏதும் இல்லை .
சாதிச் சங்கங்களின் " சாலை மறியல் " இல்லை .
தோண்டிய பள்ளத்தைத் தூர்த்து முடிப்பதற்குள்
மீண்டும் ஒருமுறை  தோண்டும்  அவலமில்லை .

சின்னப் பறவையே ,சிங்காரப் பறவையே
சிக்கல் ஒன்றுமில்லை ,சிறகடித்துப் பறந்திடுவாய் !
உள்ளம் விரிவடைந்தால் உலகம்தான் சுருங்காதோ ?
எல்லைகள் எல்லாமே --உன்
இரு சிறகுள் அடங்காதோ ?

பூங்குன்றன்  புகன்ற
புறப்பாட்டின்  புது மெட்டே !
சுதந்திரம் என்ற சொல்லின்
சுருக்கமான இலக்கணக்  குறிப்பே ! 
சுதந்திரத்தைச் சுவாசமாய்க் கொண்ட
சொர்க்கத்துப் பறவையே -நாங்கள்
எந்திரப் பொறிகளாய் நாளும் சுழல்கிறோம்
தந்திர நரிகளாய் வஞ்சனையில் உழல்கிறோம் .

உல்லாசப் பிறவியே ,உன்னைப் போல்
இதந்தரும்  இனிய  சுதந்திர வாழ்க்கை
வாழ விழைகிறோம் !
வாழ்த்திசைத்துப்  பாடு !

விரும்பிய வண்ணம் வாழ்தல் ---அதுவே
கரும்பினும் இனிக்கும் சுதந்திரமாம் என்று  இன்று
அரும்பிடும் கருத்து ---அதுவே  தீமையின் குருத்து !
சுதந்திரம் வேண்டும் பறவையைப் போல் -அதில்
அடுத்தவர் நலத்தைக் கெடுத்திடல் இல்லை !

சட்டம் என்னும் சமுதாய  வேலிக்குள்
சுதந்திரத் தோட்டத்தின்  சுகந்த மலர் வளர்ப்போம் 
சீரிய வழியில் செல்வம் ஈட்டுவோம் !
மண்ணில் அந்த விண்ணை நாட்டுவோம்
சுதந்திரப் பறவைகளாய்ப் பறந்து காட்டுவோம் !

    

Sunday, July 29, 2012

A FOLK SONG--by R.Natarajan(AADI special)

                      நாட்டுப் புறப் பாடல் (ஆடித்  திங்கள் சிறப்புப் பாடல் )



பூவோட  மாலையும்  கொண்டாந்து நீ  போடு

பாவோட ராகமும் ஒண்ணாகவே   பாடு

வேப்ப எல  தோரணத்த வீதியில கட்டு

வேகமுடன் தாளத்த உடுக்கையில தட்டு

பொன்னாத்தா  பூசையில  பொங்கலிடு  வோமே

எந்நாளும்  காப்பவ கண்ணாத்தா  தானே                  1




கலையாத கருமேகம்  சடையாடும்  அம்மாவே 
                                                   ஒன்னோட பேரச்  சொன்னா
நெலையான  பெரும்பேரும்  நெறைவான  திருவாழ்வும்    
                                                   தன்னாலே வருமே சும்மா
கருநாகம்   குடை  தந்திடும்
திரிசூலம்  ஒளி   சிந்திடும்
ஆயிரம்  பேர் கொண்டவ ---அவ
ஆயிரம்  ஊர்   நின்றவ  - அவ                                                        2
ஆயிரம்  போர்  வென்றவ



பொல்லாத   நோவும்  இல்லாமப் போகும்  மாரியம்மா --உன்

கண் பார்வ  போதுமடி  மாரியம்மா

வின  சொல்லாம  ஒடிவிடும்

மனப்  பொல்லாங்கு  மாறிவிடும் --எங்க

வெள்ளாம   பெருகிவிடும் --இனி

எல்லாமே   நீதானே --அம்மா

எல்லாமே   நீதானே                                                          3   

    

 
                                                           



Wednesday, July 25, 2012

Oru Sumaithaangiyin Kathai-A poem by R.Natarajan

                            ஒரு சுமைதாங்கியின் கதை  


சிறுமியாய்  வளர்கையிலே --அவள்
செல்வத் தம்பியைச் சுமந்திருந்தாள் .
பிறகு
கோடித் தெருவில் இருந்து
குடம் குடமாய்ச் சுமந்து  வந்து
கொதிக்கும்  கோடையால்
வறண் ட  வாய்களுக்கு
வளைக்கரத்தால்  நீர்வார்த்தாள் .

கன்னிப்  பருவத்திலே --தன்
கண்களில் கனவுகளையும்
கனத்த நெஞ்சத்தில்
காதல் நினைவுகளையும்
சுமந்து  திரிந்தாள் .

மண விழாவிற்குப் பின்பு
மங்கை தன்  மணிவயிற்றில்
மழலைச் செல்வத்தைச்
சுமந்து மகிழ்ந்திட்டாள் .
தாயென்ற  நிலையினையும்
தன்குடும்பப் பொறுப்பினையும்
தகவோடு சுமந்திட்டாள் .

முதுமை வந்த பின்பும்
முதுகு வளைந்த பின்பும்
பாரம் குறையவில்லை --அவள்
சுமையும் இறங்கவில்லை -தன்
பேரக் குழந்தைகளை  உருவாக்கும்
பெருங்கடமை  அவள்தலைமேல் .

முடியும் வரை அவள் சுமப்பாள் --வாழ்வின்
முடிவு வரை அவள் சுமப்பாள் --அவள்
சுமப்பது நின்று விட்டால் . . . . . . அது  , மற்றவர்
அவளைச் சுமக்கும் நேரம் .
      

Saturday, July 21, 2012

(UN)PROFESSIONALISM---A poem by R.Natarajan

                                    ( UN)PROFESSIONALISM

Engineers are not motivated-
motivations are often engineered.

Doctors make the
Hippocratic oath
and take the
hypocritical path.

Legal expertise
results in the
client losing a
cow for the
sake of a
cat.

Teachers teach
and also preach;
but practise them
in their breach.

Some Justices are
just vices.

Professional ethics
is now mythical.
Sense of values
has lost
its essence
where even
fences
feed on fertile
fields.