BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, June 25, 2013

விடுமாற்றமும் ,நிலைமாற்றமும் (இலக்கியத் துளி) ----By R.Natarajan

                                            விடுமாற்றமும் ,நிலைமாற்றமும் 


அது ஒரு பெரிய அரண்மனை ---ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது .பகைவர் பலரை வென்று வாகை  சூடிய மாபெரும் வீரனான அரசன் ஒருவன் தன் குடும்பத்தினருடன் அரண்மனை மேன்மாடத்தில் வசித்து வந்தான் .வெற்றிக் களிப்பும் ,செல்வச் செழிப்பும் ,ஆட்சிச் சிறப்பும் நிறைந்த அந்த இடத்தில் கேளிக்கைகளுக்கும் ,கொண்டாட்டங்களுக்கும் குறைவே இல்லை .எப்படிப்பட்ட சுகபோக வாழ்க்கை !

ஆனால் ....இதெல்லாம் இப்போது பழைய கதை .உல்லாசமும் ,கோலாகலமும்  உலா வந்த அந்த உயர் மாடத்தில் இன்று யாரும் இல்லை .அதாவது மனிதர்கள் யாரும் இல்லை .மனித நடமாட்டமே இல்லாத அந்த அரண்மனையின் மேன்மாடத்தில் பேய்களும் ,கோட்டான்களும் குடியேறி விட்டன .

இந்த  அவல நிலைக்குக் காரணம் என்ன தெரியுமா ?

தென்னவனாகிய பாண்டியன் சொல்லி அனுப்பிய சொல்லுக்கு அந்த அரசன் அடிபணிய மறுத்தான் .அவன் அனுப்பிய ஓலையை ஏற்காமல் புறக்கணித்தான் ,சீற்றம் கொண்ட பாண்டியன் செரு முனையில் அவனைக் கொன்று ,அவனைச் சேர்ந்தோரையும்  அடியோடு அழித்தொழித்தான் . அதனால் இப்போது அவ்வரசனின் அரண்மனை மாடத்தில் பேய்கள் குடியிருக்கின்றன ; கோட்டான்கள் கூக்குரல் இடுகின்றன .

போர்க்களத்தில்   வயிறு முட்டப் பிணம் தின்றதால்  தூக்கம்  வராமல் படுத்துப் புரண்டுக் கொண்டிருக்கும் பேய்களை  உறங்க வைக்கக் கோட்டான்கள் தாலாட்டுப் பாடுவதைப் போன்றல்லவோ இது   தோன்றுகிறது !
அரச குடியினர் வாழ்ந்த இடத்தில் இப்போது பேய்கள்  ஓய்வெடுக்கின்றன ..மகிழ்ச்சி ஆரவாரம் கேட்ட இடத்தில்  கோட்டான்கள் அலறுகின்றன .தென்னன் விடுமாற்றம் (அனுப்பிய ஓலையை ) கொள்ளாததால் இந்த நிலைமாற்றம் !

அந்தோ ! இரக்கத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது !  ஆனால் ,பாடலின் சொல்லழகாலும் ,பொருளழகாலும்  நெஞ்சம் மகிழ்கிறது ! நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும்  ஒருசேர விளைவிக்கும்  நிகரில்லா முத்தொள்ளாயிரப் பாடல் இதோ :

              "  வாகை வனமாலை சூடி அரசுறையும்
                 ஓகை  உயர் மாடத் துள்ளிருந்து ----கூகை
                 படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே  தென்னன்
                 விடுமாற்றம் கொள்ளாதார் நாடு !  "      

Monday, June 24, 2013

யாது நீ எழுதவில்லை --A tribute to Kannadasan-By R.Natarajan

                                                   யாது நீ  எழுதவில்லை ?


கண்ணனின்  தாசன்  தானோ !
             கவிதையின் நேசன்  தானோ !
மண்ணிலே உள்ள யாவும்
              வார்த்தையில் கொண்டு வந்தாய் !
விண்ணிலே  தேவர்  பாட
         வியத்தகு மெட்டில் நல்ல
பண்ணிலே பலவாம் பாடல்
          படைக்கவோ சென்றாய் கூறு ?  



காதலும் இருக்கும்  காந்தக்
               கவிதையும் இருக்கும் , எண்ண
மோதலும் இருக்கும் ,நெஞ்சம்
              முழுவதும் நிறைந்து  நிற்கும்
தாதவிழ் பூவைப்  போன்று
             தத்துவ மணம்சி றக்கும்  .
யாதுநீ  எழுத வில்லை ?
           இன்றமிழ்ப்  பெற்ற பிள்ளை !  

காளமேகம் கவித்திறன்

                                                       செருப்பும் விளக்குமாறும் 

                        (விகடன் 2005 தீபாவளி மலரில் வெளிவந்த என் கட்டுரை )
\

பொறாமை என்பது புலவர்களின் பூர்விகச் சொத்து என்று சொல்வதுண்டு இதனால் ஒரு நன்மையும் உண்டு .போட்டியில் தான் பல அற்புதமான பாடல்கள் படைக்கப்படுகின்றன

காளமேகப் புலவருக்கும் திருமலைராயனின் அரசவைப் புலவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியில் , தமிழ் இலக்கியத்துக்குப் பல வேடிக்கையான ,மாறுபட்ட  பாடல்கள் கிடைத்துள்ளன .

அரசவைப் புலவர்கள் வேண்டுமென்றே கொடுத்த விபரீதமான குறிப்புகளுக்குத் தக்கவாறு ,யாவரும் வியக்குமாறு பாடினார் காளமேகம் .

ஒரு புலவர் "செருப்பு " எனத் தொடங்கி , " விளக்குமாறு " என்று முடியும் வகையில் வெண்பா ஒன்றைப் பாடுமாறு சொன்னார் . விடுவாரா காளமேகம் ?
'
"செருப்புக்கு " என்பதை 'செரு + புக்கு '( 'போர்க்களம்  புகுந்து  ') என்றும் ,'விளக்குமாறு ' என்பதை  'விளக்கும் + ஆறு '( 'விளக்கமாகச் சொல்லும் வழி) என்றும் அமைத்து அசத்தி விட்டார் .

" செருப்புக்கு வீரரைச் சென்றுஉழக்கும்  வேலன் 
பொருப்புக்கு நாயகனைப் புல்ல --மருப்புக்கு
தண்தேன்  பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் 
வண்டே  விளக்கு மாறே !" 

'போரில் எதிரிப்படை  வீரர்களைத் துன்பப்படுத்தும் , மலைக்குத் தலைவனான வேலேந்திய முருகனை நான் அடைய , தாமரையில்  இருக்கும் வண்டே .... நீ  வழி காட்டு ' என்று தலைவியின் கூற்றாக அமைந்த அழகிய பாடல் இது !

Sunday, June 23, 2013

மூன்றுமுறை" உண்ட"மூதாட்டி!

                                           

                                       மூன்றுமுறை" உண்ட"மூதாட்டி!

                        (விகடன் 2005 தீபாவளி மலரில் வெளிவந்த என் கட்டுரை )

(இலக்கியம் என்பது ,மனித வாழ்வின் மகத்தானதொரு பரிமாணம் ஆகும் .மனிதன் நினைப்பது, பேசுவது ,எழுதுவது --அனைத்துமே இலக்கியத்தை உருவாக்குகின்றன .
அது புலவர்களின் பரம்பரைச் சொத்து என்றும் ,அறிவு ஜீவிகளின் ஆஸ்தி என்றும் ,மேதைகளுக்கு மட்டுமே உரிய மேலான விஷயம் என்றும் தவறாகக் கருதப்பட்டு விட்டது .
இலக்கியத்தின் இயல்பான இனிமையை நீங்கள் ரசிக்க ....ருசிக்க ... இதோ  ஓர்  இலக்கியத் துளி !)  
                                                    ------------------------

ஒரு முறை பாண்டியன் வீட்டுத் திருமண விருந்தில் ஏகப்பட்ட கூட்டம் பந்திக்கு முந்திக் கொண்டு பாய்ந்து சென்றவர்கள் , ஒரு பாட்டியைக் கீழே தள்ளி விட்டனர் .அவர் ---தமிழ்ப் பாட்டி ஔவை.

ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்தார் ஔவை .அப்போது அந்தப் பக்கம் வந்த பாண்டிய அரசன் ,அவரிடம்  " அம்மையே ,உண்டீர்களா ? விருந்து சுவையாக இருந்ததா ? " என்று அன்புடன் விசாரித்தான் .

எரிச்சலை  அடக்கிக் கொண்ட ஔவை , " உண்டேன் ,உண்டேன், உண்டேன்...  ஆனால் சோறு மட்டும் உண்ணவில்லை .!" என்று அமைதியாக  உரைத்தார் .

விழித்தான் வேந்தன் . விளக்கிச் சொல்லுமாறு  வேண்டினான் .

ஔவையார் சொன்னார் : "கூட்டத்திலே  நெருக்குண்டேன்  ; கீழே தள்ளுண்டேன் ; பசி மிகுதியால் வயிறு சுருக்குண்டேன் ....சோறு  மட்டும் உண்ணவில்லை !"

இந்தப் பொருள் வரும்படி ஔவைப் பாட்டி பாடிய பாட்டு இதோ :

"வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து 
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் -- அண்டி 
நெருக்குண்டேன் ,தள்ளுண்டேன் ,நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் ...சோறுகண்டி லேன் ! "

பாட்டைக் கேட்ட பாண்டியன் ,தன் கையால் அவருக்கு விருந்தளித்துப் பெருமைப் படுத்தினான் .        

Sunday, June 16, 2013

எந்தையே வா

                                                      எந்தையே  வா 

இன்று  (16/6/2013) தந்தையர் தினமாம் . என் பன்னிரண்டாவது வயதில் என்னைப் பிரிந்து சென்ற என் தந்தையின் நினைவு நெஞ்சத்தில் நிழலாடியது .உடனே தோன்றிய பாடலை மறைந்த என் அன்புத் தந்தைக்குக் காணிக்கையாக்குகிறேன் . 


ஐந்துடன் ஏழும் ஆன
                  
                   அகவையில் பிரிந்து சென்றாய் .

பைந்தளிர் போன்ற என்னைப் 

                  பாரினில் தனியாய் விட்டாய் 

எந்தையே ஈடு செய்ய 

                   இயம்புவேன் வழியை , என்றன் 

மைந்தனின் மைந்த னாக

                  வந்துநீ  பிறக்க  வேண்டும் !