BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Monday, February 14, 2011

DEIVA VARAME----Birthday song

தெய்வ வரமே !


காலையிளம் பனிபோன்ற முத்து--நாங்கள்
           களித்திடவே வந்திருக்கும் சொத்து -பசுஞ்
சோலைவளர் பூவெனவே சொற்றமிழின் பாவெனவே
           சிரித்தாய் -உள்ளம் -பறித்தாய் !

தரையினிலே தவழ்கின்ற மதியே -எங்கள்
           சந்ததிக்கு வாய்த்திட்ட கதியே -தா
மரைபோன்ற கன்னத்தில் மணிமுத்தம் தந்திடவோ
           இன்பம் -அதுதான் -என்போம் !

மழலைமொழி பேசுகின்ற கிளியே -எங்கள்
           மனம்கவர்ந்த இன்பத்தேன் துளியே -புல்லாங்
குழலையும் யாழையும் குவலயத்தில் வெல்லுமுன்
           சொற்கள் -கற்கண்டுக் -கற்கள் !

திறமையுடன் ஒளியதுவும் கூடி -இங்குத்
          திகழ்கின்றாய் எம்மிடையே ஆடி -எங்கள்
உறவெனவே உதித்திட்ட ஒப்பில்லா மாணிக்க
          நகையே -முல்லை -முகையே !

ஆடும்மயில் பாடும்குயில் என்று -போற்றி
         ஆயிரமும் கூறிடுவோம் இன்று -உலகில்
தேடும்சுகம் அத்தனையும் திருமகளே உன்னால்தான்
         வருமே -தெய்வ -வரமே !

 பிரவீன் -ரோஷ்ணி--இவர்களின் செல்வ மகள் மானஸாவின் முதல் ஆண்டு நிறைவின் போது பாடிய பாடல் (30-01-20110 )

Friday, February 4, 2011

ADITHYA HRUDHAYA SLOKA--- IN TAMIL VERSES-BY-R.NATARAJAN

                                      ஆற்றல் அருளும் ஆதவன்

வாழ்க்கையில் வெற்றி பெறவும் ,எடுத்த செயல்கள் இனிது நிறைவேறவும் உதவும் உன்னதமான சுலோகங்கள் பல உள்ளன .
அவற்றுள் 'ஆதித்திய ஹ்ருதயம் " தலைசிறந்தது .

இராவணனை வெற்றி கொள்ள வேண்டும் என்று போர்க்களம் புகுந்த இராமனுக்கு அகத்திய முனிவர் அருளிய அற்புதச் சுலோகம் இது .

ஆபத்து நேரங்களிலும் ,தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போதும் ,அச்சத்தின் பிடியில் அகப்பட்டு அல்லல்படும் போதும் அடுத்தது என்ன செய்வது என்று உள்ளம் குழம்பும் அல்லவா?

அப்படிப்பட்ட நேரங்களில் மனதைக் குவித்து ஒருநிலைப் படுத்தி இச்சுலோகத்தை முன்று முறை சொன்னால் துன்ப இருள் விலகி வாழ்வில் ஒளி வீசும் என்பது உறுதி .

இது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.

சமஸ்கிருதத்தில் உள்ள சுலோகங்களை உச்சரிக்க இயலாதோரும் இதன் நற்பயனை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழில் எண்சீர் விருத்தமாக எழுதியிருக்கிறேன் .

மொத்தம் முப்பது சுலோகங்கள் .
இவற்றில் சூரிய துதிகளும் ,மந்திரங்களும் அடங்கிய 16  முதல் 24 சுலோகங்களைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன் .
மூலத்தின் சாரம் முழுமையாக மொழிபெயர்ப்பிலும் உள்ளதால் இதனை ஒவ்வொரு நாளும் மும்முறை சொன்னால் நிச்சயம் பயன் உண்டு .

##################################################################################


கிழக்கென்றும் மேற்கென்றும் திசைகள் தோறும்
         கிளைக்கின்ற மலைத்தொடர்கள் போற்றி போற்றி !
ஒழுக்கமுடன் வானுலவு கோள்கள் கோவே !
           உதிக்கின்ற ஒண்நாளின் தலைவ போற்றி !
வழக்கமுடன் வெற்றியும்பின் வளமும் சேர்ப்போய் !
          வன்புரவி பொன்னிறத்தில் கொண்டோய் போற்றி !
கொழிக்கின்ற ஆயிரமாம் கதிர்க்கை வேந்தே !
          குலம்காக்கும் ஆதித்தா போற்றி, போற்றி !


பேரெழுச்சிப் பெருமறவ ! விரைந்தே செல்வோய் !
          பெருமைமிகு தாமரையை மலரச் செய்வோய் !
சாரமிகு விறலுடையோய் ! எங்கும் உள்ளோய் !
         தலைவன்நீ பிரம்மசிவ அச்சு தர்க்கும்!
சீரொழுகும் ஒளிப்பிழம்பாய் விளக்கம் காட்டிச் \
        செற்றிடுவாய் அனைத்தையுமே போற்றி ,போற்றி !
சூரமிகு சீற்றத்து ருத்ரன் போன்று
        சூரியனே விளங்குகின்றாய் போற்றி,போற்றி !


இருள்கடிந்து ,பயமகற்றிப் பகைய ழிக்கும்
          இணையில்லோய் ! வரம்பிகந்த ஆத்மா போற்றி !
மருள்மனத்து நன்றிகொன்றார் செறுவோய் போற்றி !
          வான்கோள்கள் வயவேந்தே போற்றி, போற்றி !
உருகியொளிர் பொன்போன்றோய் , அனைத்தும் கடந்த
          ஒருநெருப்பே ! பேரறிவின் பெருநெ ருப்பே !
உருவாக்கி இருளகற்றும் ஞாலச் சான்றே !
          ஒளிப்பிழம்பே ! ஒருகோடி வணக்கம் , வணக்கம் !


அழித்தனைத்தும் உருவாக்கும் தலைவ போற்றி
           அலர்கதிரால் நீர்பருகி வெம்மை ஏற்றிப்
பொழிகின்ற பெருமழையைத் தருவோய் போற்றி !
         பூவுலகம் வாழுயிர்கள் உள்ளம் மேவி
விழிமூடி உயிரனங்கள் உறங்கும் போதும்
        விழித்திருக்கும் கதிரவனே போற்றி, போற்றி!
எழுவேள்வி திருநெருப்பும் நீயே , வேள்வி
         இயற்றுபவர் பெறும்பயனாம் கனியும் நீயே !


ஞாலத்தில் நிகழ்கின்ற செயல்க ளுக்கு
            நாயகனே ஆதவனே போற்றி ,போற்றி!
சீலத்தின் சீலமாம்நல் வேதம் நீயே !
         செப்புகின்ற வேள்விகளும் நீயே தேவா !
காலத்தில் பெருவேள்வி செய்து கிட்டும்
        கனி நீயே காய்கதிரே போற்றி, போற்றி!
கோலத்தை எடுத்துரைக்கச் சொற்கள் ஏது ?
        குவலயத்தைக் காப்பாயே போற்றி, போற்றி!!!