BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, February 17, 2012

SANGATH THAMIZHANAITHUM THAA-(VENPAAKKAL)-By R.Natarajan

                                     சங்கத் தமிழனைத்தும் தா !


பாடுபொருள் எத்தனையோ ! பாடியவர் எத்தனையோ !
தேடுகின்ற எல்லாம் தெளிவாக்கும் -- நீடுலகில்
தங்கப் புதையலும் தான்வேண்டேன் ,தாயேயுன்
சங்கத் தமிழனைத்தும் தா !


தேன்வேண்டேன், பால்வேண்டேன் ,தித்திக்கும் முக்கனியும்
நான்வேண்டேன், இன்பம் நனிவேண்டேன்--"யான்வாழ்நாள்
இங்குலகில் பண்ணனுக்கே " என்ற வளவன்வாழ்
சங்கத் தமிழனைத்தும் தா!


ஈந்தான் தலையொருவன் ; ஈடில் புலவனுக்கு
வேந்தனே வெண்கவரி வீசினான் -- சாய்ந்தமுல்லை
தங்கிடத் தேர்தந்தான் தார்வள்ளல் , ஈங்கிவர்வாழ்
சங்கத் தமிழனைத்தும் தா !


காலக் கருவூலம் ,காவியப் பூஞ்சோலை ,
ஞாலம் அளந்திடும் நற்பனுவல் --சாலமிகப்
பொங்கும் சுவையமுதம் ,பொன்றாத வாழ்வியலாம்
சங்கத் தமிழனைத்தும் தா !


முத்தும் முழுமணியும் மொய்புகழ் ஆடகமும்
அத்தனைச் செல்வம் அவையாவும் -- மெத்தவே
எங்கள் இலக்கியத்திற் கீடாமோ ? ஆதலினால்
சங்கத் தமிழனைத்தும் தா !


கனலும் கறையானும் காலமாம் வெள்ளப்
புனலும் அழித்தவை போதும் !--இனிநாங்கள்
இங்கிணைந்து செம்மொழியே ! எம்முயிராய்க்  காத்திடவே
சங்கத் தமிழனைத்தும் தா !!!



(உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கவிதைப் போட்டிக்கு அனுப்பிய வெண்பாக்கள் )


குறிப்பு : கவிதைப் போட்டியின் தலைப்பு ---"சங்கத் தமிழனைத்தும் தா"















0 comments: