BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, May 26, 2013

பெண் குழந்தையின் புலம்பல் ---A poem by R.Natarajan

                               பெண் குழந்தையின் புலம்பல் 


( பழைய  குப்பைகளுக்கு  இடையே , 08/01/1998 என்று தேதியிட்டு  நான் எழுதிய  இப்பாடல் கிடைத்தது . எதற்காக  எழுதினேன் , எந்தச் சூழ்நிலையில்  எழுதினேன்  என்பதெல்லாம்  நினைவில்லை . குப்பையில்  கிடந்த  மாணிக்கத்தை   (!)  அனைவருடனும்  பகிர்ந்து 
கொள்கிறேன் . இன்றைய  சூழ்நிலைக்கு  இது  பெரும்பாலும்  பொருந்தாது  என்பதையும்  உணர்கிறேன் )


 ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தனர் .மூத்த குழந்தையும் ,கடைக்குட்டியும் ஆண்கள். நடுவில் பிறந்ததோ ஒரு பெண் இரு ஆண்களுக்கு நடுவில் பிறந்த பெண் தன் 
குறையைக் கூறுவதே இந்தப் பாடல் .)

'கட்டிய மணல் வீட்டைக் காலால்  சிதைத்தவனைத் 
தட்டிக் கேள் '  என்று  தந்தையிடம் சொன்னால் 
'சுட்டிப் பையன் ' என்று   தோள் தூக்கிக்  கொஞ்சுவதேன்? 
'ஆண்சிங்கம் ' என்றும் 'ஆளப் பிறந்தவன்'  என்றும் 
'பெட்டைக் கழுதை' என்றும் பேசுவதும் ஏன்தானோ ?
தம்பி  அழுவானாம்  --தர வேண்டும்  பொம்மைகளை .
அண்ணன்  அடிப்பானாம்  ---அத்தனையும்  தர வேண்டும் .
அழுகைக்கும் ,அடிகளுக்கும்  நான்தானா  அகப்பட்டேன் ?
விட்டுக் கொடுப்பது  பெண்ணுக்கு  அழகென்று 
தட்டி  அவர்  பறித்திடவே  தவறான  வழிவகுப்பார் .
புதுப்  பாவாடை  எனக்குண்டு  --புடைவை  கிழிந்துவிட்டால் .
சிக்கனம் என்பதை  எனக்குக்  கற்பிப்பார் 
அக்கணம்   அதைமறப்பார்   அவர்களுக்கு வாங்குகையில் .
'பெண்ணுக்குச்  செல்லம்  கூடாது  -பெருந்தீங்கு  'என்று 
புண்ணுக்குள்  கோல் விடுதல்  போன்று  கூறிடுவார் .
அண்ணன்  ,தம்பி  இருவர்  இருக்கையிலே , இந்தப்
பெண்ணுக்குப்  பரிந்து   பேசிட   யாருண்டு  ???