BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, August 18, 2012

'IRAVU'--A poem by R.Natarajan

               

  

                இரவு 

மேய்வதற்குச்  சென்றிருந்த  கறவை --இரை 
           வேண்டுமட்டும் சேகரித்த பறவை --கதிர் 
ஒய்வதற்குள் வீடடைய 
            ஒல்லெனவே  சென்றதனுள் 
            ஒடுங்கும் -உள்ளே -இடுங்கும் !

காய்வதனால் இவ்வுலகை அளிப்பான் --வெய்யோன் 
             கத்துகடல்  மூழ்கியுடல் குளிப்பான் --உள்ளே 
பாய்வதனால் வெப்பமது 
             பட்டெனவே  சட்டெனவே 
             பறக்கும் -குளிர்- பிறக்கும் !



செஞ்சுடரை எங்கெங்கும் தேடி --வானில் 
             சீர்விழிகள் தோன்றுமொரு கோடி -அவை 
துஞ்சலின்றித் தேடமதி 
              தூவிளக்காய் நல்லொளியைத்   
              தூவும் -வந்து -மேவும் !

கொஞ்சமல்ல வெண்ணிலவின் பெருமை --அதைக் 
              கூறிடவே சொற்கிடைத்தல்  அருமை -நம் 
நெஞ்சயள்ளும் கங்குலதன் 
              நேரிலா இக்  காட்சியின்பம் 
               நிலைக்கும் -துன்பம் -தொலைக்கும் !



மங்கையர்கள் தீபவொளி ஏற்றி --மால் 
              மருகனவன் நற்புகழைப் போற்றி -நிறை 
கொங்குமலர் சூடிடுவார்    
              கூந்தலிலே ,எங்கும் மணம் 
              கொழிக்கும் -உவகை-செழிக்கும் !

தங்கணவர் வரவை எதிர்  பார்த்தே  --அவர் 
              சாளரத்தை நோக்கி விழி  சேர்த்தே -தவிப்பால் 
அங்கிங்கும் அலைந்திடுவார் 
              ஆவலுடன் காத்திருப்பார் 
              அசைந்து -நெஞ்சம் -இசைந்து !!!      
                  

1 comments:

Anonymous said...

Nice one! I liked it!