முடிவில் முக்தி கொடு !
உன்
மந்திர வேய்ங்குழலின்
மனத்துக்கினிய மயக்கும் இசை
கால எல்லைகளைக் கடந்து
ஊழிதோறும் -
உடைந்து ,உருக்குலைந்து போகும்
உள்ளங்களுக்கு
உணர்வும் ,உவகையும்
ஊட்டுகின்றது
எழில் உறை யமுனைத் துறையில்
இயல்பாய் நீ இயற்றிய
சிலிர்க்கச் செய்யும் சிறுகுறும்புகள்
தெய்விகத் தேனில் தோய்த்தெடுத்த
தூய திருக்கதைகளாய்த்
திகட்டாமல் திகழ்ந்து
வழிவழியாய் வழங்கி
வருகின்றன
சிலம்புகள் ஒலி கொஞ்ச ,
சிறு கை வளை ஒளி மிஞ்ச --உன்
பிஞ்சுக் கால்கள் பின்ன --நீ
களிநடம் புரிகையில் -- சிறிதே
சிந்தும் துகள்கள்
தொடர்ந்தே வந்து தொல்லை தரும்
பிறப்பையும் இறப்பையும்
தொலைந்தே போகச் செய்யும்
பால்வடியும் உன்
பாங்கான முகத்தில்
பரவி மிளிரும்
விளையாட்டுப் புன்னகை --எங்கள்
வினைகள் அனைத்தையும்
விடாமல் விழுங்கி
விடும்
நீ
எளிய இடைமகனாகவும்
இருக்கின்றாய்
எல்லாம் வல்ல இறைவன்
எடுத்த அவதாரமுமாய்
இலங்குகின்றாய்
நீ
உரைத்த கீதை
உலகியல் , உளவியல் வழிகாட்டியாகவும்
உயர்ந்த ,உன்னத ஆன்ம ஞானத்தின்
உச்சியாகவும் ஒருசேர
உள்ளது
செப்பரிய அன்பாலும் ,
செயல்மறந்த பக்தியாலும் ,
உருகிய வெண் ணய் போல் ஆன-எங்கள்
உள்ளங்களை உடனே
கவர்ந்து விடு --கண்ணா !
அல்லல்படும் ஆன்மாக்களை
. முழுதும் முகிழச் செய்து
முடிவில் முக்தி
கொடு !!!