BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, August 4, 2012

Haiku in Tamil-By R Natarajan

                                            ஹைக்கூ 


உடைந்த சிலம்புடன் 

நியாயம்  கேட்டாள்   --

வாங்கிய  கடையில் !                                            1



சாதியின்   காலை 

ஒடித்தால்  தெரியும் --

சதி !                                                                                 2



காலைக் கடித்தது 

மேல்நாட்டுச் செருப்பு ---

முதலைத் தோல் !                                                     3



வழுக்கைத்  தலை 

பல் இல்லாத  சீப்பு --

உறவின்  முறை !                                                       4



காலக்  கிடங்கில்
கடைசியில் எஞ்சியது ---

நினைவு !                                                                         5



கண்மூடிக்  கருத்தும் மூடி 

உள்நோக்கி  ஒருபயணம் -

தவம்  !                                                                                6



எல்லாம்    நானே 

என்னுள்   எல்லாம் --

இறைமை !                                                                        7

Tuesday, July 31, 2012

MAZHAI --A poem by R Natarajan

                                
                           மழை 

அள்ளிக் கொடுத்திட 
வள்ளல் மழைக்கு 
வெள்ளிக் கரங்கள் 
                                          ஆயிரம் ,ஆயிரம் !

நீரை முகந்து, மேகம் என்னும் 
பெட்டகத்தில் சேமித்து வைத்து ,
உரிய பருவம் வந்த உடனே 
வட்டியுடன் வழங்கிடும் 
                                          வானத்து வங்கி !

இடியின் கட்டியம் எங்கும் ஒலிக்க
மின்னல் வெளிச்சம் போட்டுக் காட்ட
உல்லாசமாய் உலாவரும்  
                                         மேல்நாட்டு ராணி !

Monday, July 30, 2012

SUTHANTHIRAP PARAVAIKAL--A poem by R.Natarajan

                                 சுதந்திரப்  பறவைகள்


வானத்து  வீதியில்  வழிமறிக்கும் "சிக்னல் " இல்லை ;
அரசியல் பேரணிகள் ,அடிதடிகள் ஏதும் இல்லை .
சாதிச் சங்கங்களின் " சாலை மறியல் " இல்லை .
தோண்டிய பள்ளத்தைத் தூர்த்து முடிப்பதற்குள்
மீண்டும் ஒருமுறை  தோண்டும்  அவலமில்லை .

சின்னப் பறவையே ,சிங்காரப் பறவையே
சிக்கல் ஒன்றுமில்லை ,சிறகடித்துப் பறந்திடுவாய் !
உள்ளம் விரிவடைந்தால் உலகம்தான் சுருங்காதோ ?
எல்லைகள் எல்லாமே --உன்
இரு சிறகுள் அடங்காதோ ?

பூங்குன்றன்  புகன்ற
புறப்பாட்டின்  புது மெட்டே !
சுதந்திரம் என்ற சொல்லின்
சுருக்கமான இலக்கணக்  குறிப்பே ! 
சுதந்திரத்தைச் சுவாசமாய்க் கொண்ட
சொர்க்கத்துப் பறவையே -நாங்கள்
எந்திரப் பொறிகளாய் நாளும் சுழல்கிறோம்
தந்திர நரிகளாய் வஞ்சனையில் உழல்கிறோம் .

உல்லாசப் பிறவியே ,உன்னைப் போல்
இதந்தரும்  இனிய  சுதந்திர வாழ்க்கை
வாழ விழைகிறோம் !
வாழ்த்திசைத்துப்  பாடு !

விரும்பிய வண்ணம் வாழ்தல் ---அதுவே
கரும்பினும் இனிக்கும் சுதந்திரமாம் என்று  இன்று
அரும்பிடும் கருத்து ---அதுவே  தீமையின் குருத்து !
சுதந்திரம் வேண்டும் பறவையைப் போல் -அதில்
அடுத்தவர் நலத்தைக் கெடுத்திடல் இல்லை !

சட்டம் என்னும் சமுதாய  வேலிக்குள்
சுதந்திரத் தோட்டத்தின்  சுகந்த மலர் வளர்ப்போம் 
சீரிய வழியில் செல்வம் ஈட்டுவோம் !
மண்ணில் அந்த விண்ணை நாட்டுவோம்
சுதந்திரப் பறவைகளாய்ப் பறந்து காட்டுவோம் !

    

Sunday, July 29, 2012

A FOLK SONG--by R.Natarajan(AADI special)

                      நாட்டுப் புறப் பாடல் (ஆடித்  திங்கள் சிறப்புப் பாடல் )



பூவோட  மாலையும்  கொண்டாந்து நீ  போடு

பாவோட ராகமும் ஒண்ணாகவே   பாடு

வேப்ப எல  தோரணத்த வீதியில கட்டு

வேகமுடன் தாளத்த உடுக்கையில தட்டு

பொன்னாத்தா  பூசையில  பொங்கலிடு  வோமே

எந்நாளும்  காப்பவ கண்ணாத்தா  தானே                  1




கலையாத கருமேகம்  சடையாடும்  அம்மாவே 
                                                   ஒன்னோட பேரச்  சொன்னா
நெலையான  பெரும்பேரும்  நெறைவான  திருவாழ்வும்    
                                                   தன்னாலே வருமே சும்மா
கருநாகம்   குடை  தந்திடும்
திரிசூலம்  ஒளி   சிந்திடும்
ஆயிரம்  பேர் கொண்டவ ---அவ
ஆயிரம்  ஊர்   நின்றவ  - அவ                                                        2
ஆயிரம்  போர்  வென்றவ



பொல்லாத   நோவும்  இல்லாமப் போகும்  மாரியம்மா --உன்

கண் பார்வ  போதுமடி  மாரியம்மா

வின  சொல்லாம  ஒடிவிடும்

மனப்  பொல்லாங்கு  மாறிவிடும் --எங்க

வெள்ளாம   பெருகிவிடும் --இனி

எல்லாமே   நீதானே --அம்மா

எல்லாமே   நீதானே                                                          3   

    

 
                                                           



Wednesday, July 25, 2012

Oru Sumaithaangiyin Kathai-A poem by R.Natarajan

                            ஒரு சுமைதாங்கியின் கதை  


சிறுமியாய்  வளர்கையிலே --அவள்
செல்வத் தம்பியைச் சுமந்திருந்தாள் .
பிறகு
கோடித் தெருவில் இருந்து
குடம் குடமாய்ச் சுமந்து  வந்து
கொதிக்கும்  கோடையால்
வறண் ட  வாய்களுக்கு
வளைக்கரத்தால்  நீர்வார்த்தாள் .

கன்னிப்  பருவத்திலே --தன்
கண்களில் கனவுகளையும்
கனத்த நெஞ்சத்தில்
காதல் நினைவுகளையும்
சுமந்து  திரிந்தாள் .

மண விழாவிற்குப் பின்பு
மங்கை தன்  மணிவயிற்றில்
மழலைச் செல்வத்தைச்
சுமந்து மகிழ்ந்திட்டாள் .
தாயென்ற  நிலையினையும்
தன்குடும்பப் பொறுப்பினையும்
தகவோடு சுமந்திட்டாள் .

முதுமை வந்த பின்பும்
முதுகு வளைந்த பின்பும்
பாரம் குறையவில்லை --அவள்
சுமையும் இறங்கவில்லை -தன்
பேரக் குழந்தைகளை  உருவாக்கும்
பெருங்கடமை  அவள்தலைமேல் .

முடியும் வரை அவள் சுமப்பாள் --வாழ்வின்
முடிவு வரை அவள் சுமப்பாள் --அவள்
சுமப்பது நின்று விட்டால் . . . . . . அது  , மற்றவர்
அவளைச் சுமக்கும் நேரம் .
      

Saturday, July 21, 2012

(UN)PROFESSIONALISM---A poem by R.Natarajan

                                    ( UN)PROFESSIONALISM

Engineers are not motivated-
motivations are often engineered.

Doctors make the
Hippocratic oath
and take the
hypocritical path.

Legal expertise
results in the
client losing a
cow for the
sake of a
cat.

Teachers teach
and also preach;
but practise them
in their breach.

Some Justices are
just vices.

Professional ethics
is now mythical.
Sense of values
has lost
its essence
where even
fences
feed on fertile
fields.

Sunday, April 8, 2012

KUTRAALA ARUVI---A Poem by R.Natarajan


குற்றால அருவி !


வற்றாத குளுமைக்கு மறுபெயர் உண்டெனில்
அதுதான் --குற்றால அருவி !
வானத்தில் இருந்து வழிகின்ற 
வைரத் தண்ணீர் !
தாவி வருகின்ற 
தரளமணிக் குவியல் !
குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும்--வாரிவாரி
நீர்க்கரத்தால் வழங்கும்
நெடும்புகழ் வள்ளல் !
தெம்மாங்குப் பாடலினைத்
திரிகூட மலையில்
தேனாக இசைக்கின்ற
தெய்விகப் பேரழகி !!!
           

விண்ணை இடிக்கின்ற 
வெற்பரசன் திறல்போற்றி
வானவர்கள் பரிசளித்த
வைரமணி வடிவாள் !
நித்திலப் பெருங்கூட்டம்
நீராக மாறி
நேராக வீழ்கின்ற 
நிகரில்லா விந்தை !
செந்தமிழ் மொழியினிமை
தண்மையையும் தான்சேர்த்து
வந்த வடிவம்
வற்றாத குற்றாலம் !!!