வைரமும் வாய்ப்பும் !
சுடரொளிக் கதிரின் கீற்றும்
சூழ்ந்திடாக் கருக்கல் நேரம் .
கடற்கரை வந்து சேர்ந்தான்
காளையாம் இளைஞன் , ஆங்கோர்
இடந்தனில் அமர்ந்தான் , சூழும்
எழிலெதும் சற்றும் நோக்கான் .
உடைந்திடும் உள்ளம் தன்னில்
உலவிடும் வெறுமை மிக்கான் .
தலைமுறைக் கதைகள் சொல்லித்
தாவிடும் அலைகள் காணான்.
கலையறி மாந்தர் போற்றிக்
களித்திடும் இயற்கை காணான் .
கொலைவெறிக் கொண்டு தாக்கிக்
குலைத்திடும் கவலை மேவ
வலைஎறி மீனைப் போல
வாடியே வதங்க லானான்
மங்கிய ஒளியில் கற்கள்
மருங்கினில் கிடக்கக் கண்டான் .
இங்கிவை ஏனோ என்றே
எடுத்தவன் ஒவ்வொன் றாகப்
பொங்கிய அலைகள் மீது
போவெனத் தூக்கிப் போட்டான் .
செங்கதிர் ஒளியும் சற்றே
தெரிந்திடச் சுற்றிப் பார்த்தான்
சாக்கியர்போல் எறிந்தவனும் ஒருகல் மட்டும்
தன்னருகே இருந்திடவே எடுத்தான் , உற்று
நோக்குகையில் வைரமெனத் தெரியக் கண்டான் .
நோகாமல் வந்தசெல்வம் இழந்தான் அந்தோ !
வாழ்க்கையிலும் வைரமென வாய்ப்பு வந்து
வாயிலிலே உட்காரும் ! கல்லாய் எண்ணித்
தூக்கியதைப் போடாமல் எடுத்துக் கொள்வோம் !
தொல்கதையாம் இதையுலகில் படித்துச் சொல்வோம்!
2 comments:
Very fine composition.If you dont miss Vaaippu you can even rise to the level of manufacturing the Vairams you have Lost.Keep it up.
Best wishes.
Rmk
very nice and informative story in apoetic form.dhanusha.bob
Post a Comment