BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, September 16, 2012

"ENGAL SONTHAM"--A Farewell poem in honour of Mr A Durairaj -By R Natarajan

                                            எங்கள் சொந்தம் !


வீசுகின்ற  காற்றுக்கும் இல்லை ஒய்வு 
        விரிகடலின் அலைகளுக்கும் இல்லை ஒய்வு 
பேசுபுகழ் துரைராஜாம் எங்கள் நண்பன் 
        பெறுகின்றான் ஓய்வென்றால் விந்தை அன்றோ !
மாசில்லாச் செம்மொழியாம் தமிழில் ஆர்வம் 
        மாறாத இயல்புடையான், பேச்சில் வல்லான், 
வாசமலர் வண்டெனவே  நட்பு  நாடி
        வருபவர்க்கோர்  இலக்கணமாய் இலங்கு கின்றான்                  1



வீதியிலே மேடென்றும் பள்ளம் என்றும் 
        விளங்குவதைக் கண்டிடலாம் ,ஆனால் மக்கள் 
சாதியிலே மேடுபள்ளம் இருக்கும் தன்மை 
        சலிப்பின்றி எதிர்க்கின்ற கொள்கை வீரன் 
போதிமரப் புத்தன்போல் அமைதி காப்பான் 
         புயலெனவே  வெகுண்டிடுவான் கொடுமை கண்டால் 
ஆதிமுதல் தொழிற்சங்கப் பணியில் மூழ்கி 
        அறுபதிலும் தொடர்கின்றான் வாழ்க ! வாழ்க !



ஒன்றல்ல நூறல்ல வாழ்த்தும் நெஞ்சம் 
        உழைக்கின்ற வர்க்கத்தின் முழக்கம் நீதான் !
பொன்றாத பொதுவுடைமை நோக்கம் கொண்டாய்   
        பொதுவாழ்வில் மட்டில்லா இன்பம் கண்டாய் 
நன்றென்றும் தீதென்றும் வந்த போதும் 
        நலியாத உறுதிக்கோர் எடுத்துக் காட்டே !
இன்றோடு முடிவதில்லை நமது பந்தம் 
        என்றென்றும் நீயிருப்பாய்  எங்கள் சொந்தம் !!!               



(பரோடா வங்கிப் பணியிலிருந்து நண்பர் திரு A.துரைராஜ் அவர்கள் 31-8-2010 அன்று ஒய்வு பெற்ற போது SC/ST ஊழியர் நலச் சங்கம்  சார்பில்  வாழ்த்திப் பாடியது   )    

0 comments: