சுதந்திரப் பறவைகள்
வானத்து வீதியில் வழிமறிக்கும் "சிக்னல் " இல்லை ;
அரசியல் பேரணிகள் ,அடிதடிகள் ஏதும் இல்லை .
சாதிச் சங்கங்களின் " சாலை மறியல் " இல்லை .
தோண்டிய பள்ளத்தைத் தூர்த்து முடிப்பதற்குள்
மீண்டும் ஒருமுறை தோண்டும் அவலமில்லை .
சின்னப் பறவையே ,சிங்காரப் பறவையே
சிக்கல் ஒன்றுமில்லை ,சிறகடித்துப் பறந்திடுவாய் !
உள்ளம் விரிவடைந்தால் உலகம்தான் சுருங்காதோ ?
எல்லைகள் எல்லாமே --உன்
இரு சிறகுள் அடங்காதோ ?
பூங்குன்றன் புகன்ற
புறப்பாட்டின் புது மெட்டே !
சுதந்திரம் என்ற சொல்லின்
சுருக்கமான இலக்கணக் குறிப்பே !
சுதந்திரத்தைச் சுவாசமாய்க் கொண்ட
சொர்க்கத்துப் பறவையே -நாங்கள்
எந்திரப் பொறிகளாய் நாளும் சுழல்கிறோம்
தந்திர நரிகளாய் வஞ்சனையில் உழல்கிறோம் .
உல்லாசப் பிறவியே ,உன்னைப் போல்
இதந்தரும் இனிய சுதந்திர வாழ்க்கை
வாழ விழைகிறோம் !
வாழ்த்திசைத்துப் பாடு !
விரும்பிய வண்ணம் வாழ்தல் ---அதுவே
கரும்பினும் இனிக்கும் சுதந்திரமாம் என்று இன்று
அரும்பிடும் கருத்து ---அதுவே தீமையின் குருத்து !
சுதந்திரம் வேண்டும் பறவையைப் போல் -அதில்
அடுத்தவர் நலத்தைக் கெடுத்திடல் இல்லை !
சட்டம் என்னும் சமுதாய வேலிக்குள்
சுதந்திரத் தோட்டத்தின் சுகந்த மலர் வளர்ப்போம்
சீரிய வழியில் செல்வம் ஈட்டுவோம் !
மண்ணில் அந்த விண்ணை நாட்டுவோம்
சுதந்திரப் பறவைகளாய்ப் பறந்து காட்டுவோம் !