தொடராகிய வாழ்வு பெருந்துயரம்
துணையாகநீ வந்தால் அதுமறையும் .
இடரேகளைய இதுவே தருணம்
இனி ,சேஷகுரு திருவடி சரணம் !
அறியேன்எதுவும் அகிலம் தனிலே
அவமாய்ப் பிறவி அழிதல் அழகோ ?
சிறியேன் புரியும் செயல்கள் பிழையே
திருசேஷகுரு மலரடி சரணம் !
அதுவும், இதுவும், எதுவும் வருமோ ,
அறுந்தால் உடம்போ டுயிரின் தொடர்பே ?
மதியாய், விதியாய்க் கதியாய் எனக்கே
வருசேஷகுரு திருவடி சரணம் !
மனமே தினமே மரமேல் குரங்காய்
மதமே மிகவே கிளைகள் குதிக்கும்
இனிமேல் இதைநீ பொறுத்தல் தகுமோ ?
எழில்சேஷகுரு திருவடி சரணம் !
நிழலும் தருமே மரமே , அதைப்போல்
நெடிதேவளர்என் உடல்தான் தருமோ ?
உழலும் உயிர்கட் குதவப் பணிப்பாய்
ஒளிர்சேஷகுரு திருவடி சரணம் !
அறிவும், திருவும், அழகும் இணைந்தே
அமைந்தே விடினும் வருமோ அமைதி ?
பொறிகள் அடங்கும் வழிதான் புகல்வாய்
புகழ்சேஷகுரு திருவடி சரணம் !
பதறிக் கதறிப் பலநாள் கழியப்
பயணம் முடிந்தால் பயன்தான் உளதோ ?
உதவிபுரிய உடனே வருவாய் !
உறுசேஷகுரு திருவடி சரணம் !
அருணை ஒளியே , கருணை வடிவே
அகத்தின் இருளை அடியோ டழிப்பாய் !
ஒருமை உணர்ந்தேன் , உண்மை அறிந்தேன்
உயர்சேஷகுரு திருவடி சரணம் !!!
2 comments:
'SESHASHTAKAM' IS REALLY SUPERB. IT APPEARS HE INDUCED YOU TO WRITE THIS - BALU
Appa, U are the next asset to the language after Bharati.. What profound thoughts, beautiful words! WOW!!
Post a Comment