BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, June 25, 2013

விடுமாற்றமும் ,நிலைமாற்றமும் (இலக்கியத் துளி) ----By R.Natarajan

                                            விடுமாற்றமும் ,நிலைமாற்றமும் 


அது ஒரு பெரிய அரண்மனை ---ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது .பகைவர் பலரை வென்று வாகை  சூடிய மாபெரும் வீரனான அரசன் ஒருவன் தன் குடும்பத்தினருடன் அரண்மனை மேன்மாடத்தில் வசித்து வந்தான் .வெற்றிக் களிப்பும் ,செல்வச் செழிப்பும் ,ஆட்சிச் சிறப்பும் நிறைந்த அந்த இடத்தில் கேளிக்கைகளுக்கும் ,கொண்டாட்டங்களுக்கும் குறைவே இல்லை .எப்படிப்பட்ட சுகபோக வாழ்க்கை !

ஆனால் ....இதெல்லாம் இப்போது பழைய கதை .உல்லாசமும் ,கோலாகலமும்  உலா வந்த அந்த உயர் மாடத்தில் இன்று யாரும் இல்லை .அதாவது மனிதர்கள் யாரும் இல்லை .மனித நடமாட்டமே இல்லாத அந்த அரண்மனையின் மேன்மாடத்தில் பேய்களும் ,கோட்டான்களும் குடியேறி விட்டன .

இந்த  அவல நிலைக்குக் காரணம் என்ன தெரியுமா ?

தென்னவனாகிய பாண்டியன் சொல்லி அனுப்பிய சொல்லுக்கு அந்த அரசன் அடிபணிய மறுத்தான் .அவன் அனுப்பிய ஓலையை ஏற்காமல் புறக்கணித்தான் ,சீற்றம் கொண்ட பாண்டியன் செரு முனையில் அவனைக் கொன்று ,அவனைச் சேர்ந்தோரையும்  அடியோடு அழித்தொழித்தான் . அதனால் இப்போது அவ்வரசனின் அரண்மனை மாடத்தில் பேய்கள் குடியிருக்கின்றன ; கோட்டான்கள் கூக்குரல் இடுகின்றன .

போர்க்களத்தில்   வயிறு முட்டப் பிணம் தின்றதால்  தூக்கம்  வராமல் படுத்துப் புரண்டுக் கொண்டிருக்கும் பேய்களை  உறங்க வைக்கக் கோட்டான்கள் தாலாட்டுப் பாடுவதைப் போன்றல்லவோ இது   தோன்றுகிறது !
அரச குடியினர் வாழ்ந்த இடத்தில் இப்போது பேய்கள்  ஓய்வெடுக்கின்றன ..மகிழ்ச்சி ஆரவாரம் கேட்ட இடத்தில்  கோட்டான்கள் அலறுகின்றன .தென்னன் விடுமாற்றம் (அனுப்பிய ஓலையை ) கொள்ளாததால் இந்த நிலைமாற்றம் !

அந்தோ ! இரக்கத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது !  ஆனால் ,பாடலின் சொல்லழகாலும் ,பொருளழகாலும்  நெஞ்சம் மகிழ்கிறது ! நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும்  ஒருசேர விளைவிக்கும்  நிகரில்லா முத்தொள்ளாயிரப் பாடல் இதோ :

              "  வாகை வனமாலை சூடி அரசுறையும்
                 ஓகை  உயர் மாடத் துள்ளிருந்து ----கூகை
                 படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே  தென்னன்
                 விடுமாற்றம் கொள்ளாதார் நாடு !  "      

0 comments: