BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS �
Showing posts with label Tamil Poetry. Show all posts
Showing posts with label Tamil Poetry. Show all posts

Saturday, January 15, 2011

PONGAL VAAZHTHU

                                                      பொங்கல் வாழ்த்து !

தென்றல் உலவட்டும் , அமைதி நிலவட்டும் ---முகத்தில்
                  சிறுநகை மலரட்டும் !

சென்றவை மறக்கட்டும் , வருபவை சிறக்கட்டும் --நல்ல
                 காலம் பிறக்கட்டும் !

தீமை அழியட்டும் , துன்பம் ஒழியட்டும் --வானம்
               சீர்மழை பொழியட்டும் !

உலகோர் உழைக்கட்டும் , எளியோர் பிழைக்கட்டும் --என்றும்
              உண்மை தழைக்கட்டும் !

மகிழ்ச்சி பொங்கட்டும் , வறுமை மங்கட்டும் --எல்லா
              வளமும் தங்கட்டும் !!!

              

Tuesday, August 31, 2010

aagaayak koorai

விருப்பத்தைத்   தெரிவித்தா  பிறந்தேன் ? கூட்டை
             விட்டுயிர்தான்  போம் நாளும்   அறிதல் உண்டா ?
கருப்பையை  விட்டு வெளி   வந்த  நாளாய்க்
             கா டடையும்   நாள்வரையில்   ஏற்றத்  தாழ்வு
திருப்பங்கள்  வந்துபோதல்  இயற்கை  அன்றோ !
            செருக்கடைதல் , துயரடைதல்   இல்லை, இல்லை !
உருப்படியாய்  வாழ்நாளில்  உலகிற் காக
            ஒன்றேனும்  செய்தபின்பே  உயிர்துறப்பேன் !


வேதனைகள்   வாழ்க்கையிலே   வந்த  பின்னர்
           வெம்பிமனம்   புழுங்குவதால்  பயன்தான்   என்ன ?
சோதனைகள்   அடுக்கடுக்காய்  உற்ற  போதும்
           சுமக்கின்ற  வலுவென்றன் தோள்கட்  குண்டு .
சாதனைகள்   புரிந்திடுவோர்  புகழைப்  பாடும்
           சரித்திரத்தில்  நிலையான  இடம்பிடிப்பேன்!
ஈது எனது  கொள்கைஎன   ஆன தாலே
         எதுவரினும்   சந்திப்பேன் , வெற்றி   கொள்வேன் ! 


இப்புவியில் வெற்றிபெற  வேண்டு மென்றே
        என்னுள்ளம்  கருதியபின்  தடைதான்  என்ன ?
ஒப்பில்லா  உள்ளம்தான்  உயர்ந்து  விட்டால்
       உரைக்கின்ற  சொற்களுடன்  செயல்கள்  எல்லாம்
தப்பின்றித்  தவறின்றித்  தளர்வும்  இன்றித்
       தகவுடனே  நொடிப்பொழுதில்  தடை கடக்கும்
அப்பொழுது   நெடுங்கடலும்  குளமாய்  மாறும் !
        ஆகாயம்  என்வீட்டுக்  கூரை  யாகும் !!!