விருப்பத்தைத் தெரிவித்தா பிறந்தேன் ? கூட்டை
விட்டுயிர்தான் போம் நாளும் அறிதல் உண்டா ?
கருப்பையை விட்டு வெளி வந்த நாளாய்க்
கா டடையும் நாள்வரையில் ஏற்றத் தாழ்வு
திருப்பங்கள் வந்துபோதல் இயற்கை அன்றோ !
செருக்கடைதல் , துயரடைதல் இல்லை, இல்லை !
உருப்படியாய் வாழ்நாளில் உலகிற் காக
ஒன்றேனும் செய்தபின்பே உயிர்துறப்பேன் !
வேதனைகள் வாழ்க்கையிலே வந்த பின்னர்
வெம்பிமனம் புழுங்குவதால் பயன்தான் என்ன ?
சோதனைகள் அடுக்கடுக்காய் உற்ற போதும்
சுமக்கின்ற வலுவென்றன் தோள்கட் குண்டு .
சாதனைகள் புரிந்திடுவோர் புகழைப் பாடும்
சரித்திரத்தில் நிலையான இடம்பிடிப்பேன்!
ஈது எனது கொள்கைஎன ஆன தாலே
எதுவரினும் சந்திப்பேன் , வெற்றி கொள்வேன் !
இப்புவியில் வெற்றிபெற வேண்டு மென்றே
என்னுள்ளம் கருதியபின் தடைதான் என்ன ?
ஒப்பில்லா உள்ளம்தான் உயர்ந்து விட்டால்
உரைக்கின்ற சொற்களுடன் செயல்கள் எல்லாம்
தப்பின்றித் தவறின்றித் தளர்வும் இன்றித்
தகவுடனே நொடிப்பொழுதில் தடை கடக்கும்
அப்பொழுது நெடுங்கடலும் குளமாய் மாறும் !
ஆகாயம் என்வீட்டுக் கூரை யாகும் !!!
Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts
Tuesday, August 31, 2010
aagaayak koorai
Posted by Unknown at 8:53 PM 1 comments
Labels: Natarajan, Poetry, Tamil, Tamil Poetry
Subscribe to:
Posts (Atom)
