காலை
கங்குலெனும் மாற்றரசன் கடும்போர் செய்து
களைத்தபின்னர் ஆற்றாது வெள்கி ஓடச்
செங்கதிராம் படைகொண்டு வெய்யோன் வென்ற
செய்தியினைச் செங்கொண்டைச் சேவல் கூவும்
பொங்கரினில் போதவிழும் புதும ணத்தைப்
பொற்புடனே இளந்தென்றல் சுமந்து வீசும்
தங்கமெனக் கீழ்வானம் பொலிவு கொள்ளத்
தமிழ்ப்புலவோர் வாழ்த்துரைக்கும் காலைப் போது
கீழ்வானம் வெளுப்படைய மாம ரத்துக்
கிளையினிலே கருங்குயில்கள் கூடிக் கூவ ,
தாழ்வாரம் தனில்சிட்டுக் குருவி மேய ,
தையலர்கள் வாயிலிலே கோலம் போட ,
யாழ்வாணர் இசையோடு தமிழும் சேர்த்தே
எவ்வுயிரும் மயங்கிடவே உருகிப் பாட ,
வாழ்வாங்கு வாழ்கவெனப் புலவோர் கூறும்
வாழ்த்தொலிகள் பரவுகின்ற காலைப் போது
0 comments:
Post a Comment